கவிதை முத்து ”சமநிலைப்பாடு!”
#Poems
Mugunthan Mugunthan
2 years ago

- உன்னை பாராட்டுகின்றனர்
என கர்வம் கொள்ளாதே...
நாளை உன்னை
மதிக்காமலும் இருப்பர்!
- இன்று அலட்சியம் செய்வதால்
மனம் வெம்பி போகாதே...
நாளை உன்னை
பாராட்டி மெச்சுவர்!
- அன்பாக இருப்பதாக
அப்படியே நம்பி விடாதே...
நாளை உன்னை
வெறுத்தும் பேசுவர்!
- துரோகத்தை கண்டு
துயரம் கொள்ளாதே...
நாளை உன்னிடம்
மன்னிப்பு கேட்பர்!
- உச்சபட்ச மகிழ்ச்சியென
உற்சாகக் கூச்சலிடாதே...
நாளை உனக்கதுவே
வருத்தமாய் மாறி விடும்!
- துன்பம் வந்ததென
துவண்டு போகாதே...
நாளை உனக்கதுவே
வெற்றியாய் மாறி விடும்!
- வசதி வந்து விட்டதென
ஆட்டம் போடாதே...
நாளை உனக்கு
பணமே பாரமாகும்!
- ஏழ்மையை எண்ணி நீ
தாழ்மை உணராதே...
நாளை நீயும்
செல்வந்தர் ஆகிடலாம்!
- இன்பமோ, துன்பமோ,
ஏற்றமோ, தாழ்வோ,
அன்போ, துரோகமோ,
வசதியோ, ஏழ்மையோ
- இரண்டையும்
ஒன்றாகப் பார்!
- ஒருபோதும்
வாழ்வின் பிடித்தம்
வற்றிப் போகாது
உன் கையை விட்டு வெற்றி
விட்டுப் போகாது!



